அந்தமான் நிக்கோபார் தலைநகரான போர்ட் பிளேரில், வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் திறக்கப்பட்டது. டெல்லியிலிருந்து பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய பிரதமர், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து பேசிய அவர், ஊழல்வாதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவதாக தெரிவித்தார்.
தேசத்திற்கு பதிலாக குடும்பத்திற்கே எதிர்க்கட்சிகள் முக்கியத்துவம் அளிப்பதாகவும், வாரிசு அரசியல் நாட்டின் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது என்றும் கூறினார். மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் வன்முறையில் தங்கள் கட்சி தொண்டர்கள் கொல்லப்பட்டதை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நாட்டில் விமானங்களின் எண்ணிக்கை 400ல் இருந்து 700 ஆக உயர்ந்துள்ளதாகவும், பசுமை விமான நிலையங்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.