48 பேரை பலி வாங்கிய மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் வன்முறை, மோசமான ஜனநாயகத்தின் அடையாளம் என்று பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
வன்முறை தொடர்பாக ஆய்வு செய்ய, பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் 4 பேர் அடங்கிய உண்மை கண்டறியும் குழு மேற்குவங்கம் சென்றுள்ளது.
அப்போது கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த ரவிசங்கர் பிரசாத், இடதுசாரிகளின் அரசியலை விட மம்தா பானர்ஜியின் அரசியல் அசிங்கமாகி விட்டதாகவும், அட்டூழியங்கள் நிறைந்துள்ளதாகவும் சாடினார்.
மேற்குவங்கத்தில் ஒவ்வொரு தேர்தலின்போதும் நீதிமன்றம் தலையிட வேண்டிய நிலை இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர்களும் தாக்கப்படும்போது ராகுல் காந்தி ஏன் அமைதியாக இருக்கிறார் என்பதும் ரவிசங்கர் பிரசாத்தின் கேள்வியாக உள்ளது.