மணிப்பூர் வன்முறை தொடர்பாக பூர்வீக பழங்குடி தலைவர்கள் மன்றம் கூகி சமூக மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
மணிப்பூரில் பழங்குடி மக்கள் மட்டுமே மலைப்பகுதிகளில் நிலம் பெற முடியும் என்பது சட்டம். இதனால் அம்மாநித்தில் பெரும்பான்மையாக வாழும் மெய்தெய் இன மக்கள் நிலம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.
அவர்களின் மக்கள்தொகை பெருகி வரும் நிலையில், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குமாறு மெய்தெய் மக்கள் கோரினர். இதற்கு கூகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. அதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்விடங்களை இழந்தனர்.
இந்த நிலையில், மெய்தி மக்களுடன் மோதல் மேற்கொள்ளும் வகையில் அப்பாவி கூகி மக்களை மூளைச்சலவை செய்ததாக அம்மாநிலத்தின் பூர்வீக பழங்குடி தலைவர்கள் மன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக கூகி மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக பூர்வீக பழங்குடி தலைவர்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பழங்குடி மக்களின் நலன் மற்றும் ஒற்றுமைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பான தாங்கள், அதை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்து விட்டதாகவும் அந்த மன்றம் தெரிவித்துள்ளது. இரு சமூகங்களுக்கு இடையே நிலவும் அசாதாரண சூழலை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.