ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு காணாமல் போனதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 28 வகையான பொருட்கள் குறித்த விபரத்தை வழங்குமாறு சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கேட்டு பெங்களூர் சமூக ஆர்வலர் கடிதம் எழுதியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் நகை, புடவை, காலணிகள் உள்ளிட்டவை லஞ்ச ஒழிப்புத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
26 ஆண்டுகளாக இருப்பில் உள்ள அந்த பொருட்களை ஏலம் விட வேண்டுமென பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிங்க மூர்த்தி கர்நாடக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அப்போது, தங்க, வைரம், மரகதம், ரூபி, முத்துகள் போன்ற மொத்தம் 30 கிலோ நகைகள் மட்டுமே நீதிமன்றத்தில் இருப்பதும், 11 ஆயிரத்து 344 புடவைகள், 250 சால்வைகள், 750 ஜோடி காலணிகள், விலையுயர்ந்த கடிகாரங்கள், பரிசு பொருட்கள் என 28 வகையிலான பொருட்கள் இல்லையென்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
அந்த 28 வகையான பொருட்கள் லஞ்ச ஒழிப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால் அவற்றை கர்நாடகா நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என கேட்டு நரசிம்ம மூர்த்தி, தமிழக ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.