மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டதை அடுத்து எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி நிர்வாகிகள் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அந்த கூட்டணியில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், அணி மாறி துணை முதலமைச்சராக பதவி ஏற்றிருப்பதை அடுத்து, புதிய எதிர்க்கட்சித் தலைவராக சரத் பவாரின் ஆதரவாளர் ஜிதேந்திர அவாத் நியமிக்கப்பட்டார்.
ஆனால், தற்போதைய சூழலில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை தங்களுக்கு அதிகமாக உள்ளதால், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர திட்டமிட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினர்.
மறுபுறம், உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த நிர்வாகிகளும் மாநிலத்தின் அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதனிடையே, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் அஜித் பவாரும் பங்கேற்றார்.