ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிர்தப்பிய தமிழக பயணிகள் 137 பேர் சிறப்பு ரயில் மூலம் புவனேஷ்வரில் இருந்து இன்று காலை சென்னை சென்டரல் ரயில் வந்தடைந்தனர்.
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் உள்ளிட்டோர் அவர்களை நேரில் சென்று வரவேற்றனர். விபத்து குறித்து பேசிய பயணிகள், அந்த தருணத்தை விவரிக்கவே இயலவில்லை என்றும் தங்களுடன் வந்தவர்கள் பலர் கை, கால்களை இழந்ததோடு, பலர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் வேதனை தெரிவித்தனர்.
பத்தே நொடிகளில் ரயில் பெட்டிகள் முழுவதும் தடதடவென சாய்ந்ததாகவும், ஒருவர் மீது ஒருவர் சரிந்து விழுந்த போது உயிருடன் இருப்போம் என்றே நினைக்கவில்லை என்றும் பெண் ஒருவர் பதட்டத்துடன் சம்பவத்தை விவரித்தார்.
ஏசி பெட்டியில் இருந்த தங்களுக்கு சத்தம் மட்டுமே கேட்டதாகவும் வெளியே சென்று பார்த்த போது தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்ததே தங்களுக்கு தெரியும் என்றும் பெட்டிகள் தடம் புரண்டு, என்ஜின் செங்குத்தாக நின்றுக் கொண்டிருந்ததாகவும் மற்றொரு பயணி தெரிவித்தார்.