உலகின் பழமையான மொழியான தமிழ், இந்தியர்கள் ஒவ்வொருவரின் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பான், பப்புவா நியு கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பிய அவரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமையில் ஏராளமானோர் வரவேற்றனர்.
அவர்கள் மத்தியில் பேசிய பிரதமர், பப்புவா நியு கினியாவில் டாக் பிஸின் மொழியில் திருக்குறளின் மொழி பெயர்ப்பு புத்தகத்தை வெளியிட்டது தமக்குக் கிடைத்த பெருமை என்றார். கொரோனா தடுப்பூசி மருந்தை வெளிநாடுகளுக்கு இந்தியா ஏன் வழங்குகிறது என்ற எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கு பதிலளித்த பிரதமர், புத்தர் மற்றும் காந்தியின் தேசமான இந்தியா, எதிரிகளின் மீதும் இந்தியா அக்கறை செலுத்தும் என்று கூறினார்.
வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது என்ற தமது கருத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்த பிரதமர், ஒவ்வொரு விவகாரத்திலும் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.