ஜம்மு காஷ்மீரில் ஜி20 அமைப்பின் சுற்றுலா பணிக்குழு கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் வரும் மே 22 முதல் 24 ஆம் தேதி வரை அந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளதாக காஷ்மீர் ஏடிஜிபி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புப்படை மற்றும் ராணுவத்தினரின் உதவியை நாடி உள்ளதாகவும் டிரோன்களை கண்டறிந்து தாக்கும் அதிநவீன கருவிகள் முன்னெச்சரிக்கையாக பொருத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மார்கோஸ் எனப்படும் இந்திய கடற்படையின் அதிரடி கமான்டோ படையினர் தால் ஏரிப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.