சென்னை, சேப்பாக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிர்களின் புல்லட்களை குறிவைத்து திருடிய இரண்டு பேரை கைது செய்துள்ள போலீசார், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலைய பார்க்கிங் பகுதிகளில் மறைத்து வைத்த 10 பைக்குகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மாதவரத்தை சேர்ந்த அஸ்வின் என்பவர் கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண வந்தபோது, வாலாஜா சாலையில் நிறுத்திவிட்டுச் சென்ற தனது புல்லட் இரு சக்கர வாகனம் காணவில்லை என புகார் அளித்தார்.
இது குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரித்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் இரண்டு நபர்கள் லாவகமாக சைடு லாக்கை உடைத்து வாகனத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.
இதே போல் கிரிக்கெட் ரசிகர்களின் புல்லட் வாகனங்கள் மட்டுமே குறிவைத்து திருடப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரை அடுத்து இருவரையும் கையும், களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை நடந்த சென்னை - பஞ்சாப் ஐபிஎல் போட்டியின் போது, புல்லட் திருடர்கள் இருவரும் வழக்கம்போல கைவரிசை காட்ட சாதாரண உடையில் கண்காணிப்பில் இருந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் திருநெல்வேலியைச் சேர்ந்த சுபாஷ்ராஜன் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மணி என்பதும் திருடிய வாகனங்களை ரயில் நிலைய, பேருந்து நிலைய பார்க்கிங்க் பகுதிகளில் மறைத்து வைத்து, மொத்தமாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.