திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிடும் பணியின்போது அமெரிக்க டாலரை ஆடைக்குள் மறைத்து வைத்து எடுத்துச்சென்ற ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், ஆபரணங்களை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் உள்ள கட்டடத்தில் நடைபெற்றது.
இதில், தேவஸ்தான ஊழியர்கள், தன்னார்வலர்கள், வங்கி அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காணிக்கையை கணக்கிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் ரவிக்குமார் சந்தேகத்திற்கிடமாக எழுந்து வெளியே சென்றதை, சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், ஊழியர் ரவிக்குமாரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவரது ஆடைகளுக்குள் 72 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் திருமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் படி, ஊழியர் ரவிக்குமார் கைது செய்யப்பட்டார்.