ஐதராபாத்தில், ஏலச்சீட்டு பணத்தை கேட்டு தகராறு செய்த துணி வியாபாரியின் 8 வயது மகனை கடத்திக் கொலை செய்து சடலத்தை சாக்கு மூட்டையில் போட்டு கால்வாயில் வீசிய திருநங்கை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சனத் நகரைச் சேர்ந்த துணி வியாபாரி வாசிம்கான் என்பவர், தனது வீட்டருகே வசிக்கும் திருநங்கை இம்ரானிடம், 5 லட்சம் ரூபாய் சீட்டு போட்டுள்ளார். கடந்த வாரம் வாசிம்கான் சீட்டை எடுத்த நிலையில், இம்ரான் அந்த பணத்தை தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாசிம்கானின் 8 வயது மகன் காணாமல் போயுள்ளார்.
சிசிடிவி காட்சிகள் மூலம் துப்புத் துலக்கிய போலீசார், இம்ரான் உட்பட 4 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, திடுக்கிடும் தகவல் வெளியானது. வாசிம்கான் சீட்டு பணத்தை கேட்டு தகராறு செய்ததால், அவரது மகனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி அடித்து துன்புறுத்திக் கொன்று, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி அருகிலுள்ள கால்வாயில் வீசியதாக இம்ரான் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, கால்வாயில் கிடந்த சடலத்தை போலீசார் மீட்டனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சிறுவனைக் கொன்ற இம்ரானின் வீட்டை சூறையாடினர்.