பஞ்சாப்பின் பதிண்டா ராணுவ முகாம் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில், தனிப்பட்ட விரோதம் காரணமாக ராணுவ வீரர் ஒருவர், சக வீரர்களை சுட்டுக்கொன்றது தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 12-ம் தேதி, பதிண்டா ராணுவ முகாமில் அதிகாலையில் நடைபெற்ற தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பதிண்டா போலீசார் வழக்கு பதிந்த நிலையில், இன்று ராணுவ வீரர் மோகன் தேசாய் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகள், உயிரிழந்த 4 வீரர்களும், மோகன் தேசாயை துன்புறுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக 4 வீரர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாக கூறியதாகவும் தெரிவித்தனர்.
இதற்காக 9ம் தேதியே INSAS துப்பாக்கியை திருடிச்சென்று மறைத்து வைத்து, 12-ம் தேதி காவல் பணியில் இருந்தபோது, அதிகாலை 4.30 மணியளவில் உறங்கிக்கொண்டிருந்த 4 வீரர்களையும் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.