கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியடைந்து, அக்கட்சியிலிருந்து முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமண் சாவடி விலகியுள்ளார்.
224 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக 2 கட்ட வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிட்டுள்ளது. இதில் தனது பெயர் இல்லாததால், சட்டமேலவை உறுப்பினர் பதவியில் இருந்தும், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் சாவடி விலகியுள்ளார்.
தாம் சுயமரியாதை மிக்க அரசியல்வாதி என்றும், யாசக பாத்திரத்துடன் அழையும் நபர் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து லட்சுமண் சாவடி விலகியிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, தேவைப்பட்ட அனைத்தையும் பாஜக வழங்கியதாகவும், அப்படியிருந்தும் சாவடி ஏன் அதிருப்தியடைந்தார் என தெரியவில்லை என்றார். இதனிடையே, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் நாளை புதிதாக ஏராளமானோர் சேர இருப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.