தெலங்கானா மாநிலத்தில், செகந்திராபாத் - திருப்பதி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை உட்பட சுமார் 11 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஹைதராபாத் வந்த பிரதமரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அம்மாநில அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ், மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் வரவேற்றனர்.
செகந்திரபாத் ரயில் நிலையம் சென்ற பிரதமர் மோடி, செகந்திரபாத் - திருப்பதி இடையிலான நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இரண்டு நகரங்களுக்கு இடையிலான 663 கிலோமீட்டர் தூரத்தை, எட்டரை மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கும் நிலையில், சுமார் மூன்றரை மணி நேர பயணம் இதன்மூலம் குறைக்கப்படுகிறது.
தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், 1,300 கோடி மதிப்பிலான பிபிநகர் எய்ம்ஸ் மேம்பாட்டுப் பணிகளுக்கும், 7,500 கோடி மதிப்பிலான 5 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும், 720 கோடி மதிப்பிலான செகந்திராபாத் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.