நீதித்துறையின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களைக் குறைக்க மத்திய சட்ட அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
இதற்காக ஒற்றைச் சாளர முறையை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளின் சார்பிலான சட்ட மனுக்கள் இதில் பரிசீலிக்கப்படும். நீதிமன்றங்களில் வழக்குகளையும் மனுக்களையும் குறைப்பதற்கான நடவடிக்கையை அனைத்து அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து செயல்படுத்த உள்ளன.
கடந்த ஆண்டு இறுதியின் நிலவரப்படி மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சமாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் 69 ஆயிரம் வழக்குகளும், 25 உயர்நீதிமன்றங்களில் 59 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.