சென்னை பெரியமேட்டில், நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், நீச்சல் பயிற்சியாளர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓட்டேரியைச்சேர்ந்த தேஜஸ் குப்தா என்ற சிறுவன், வழக்கமாக பயிற்சி மேற்கொள்ளும் பெரியமேட்டிலுள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில் நேற்று மாலை பயிற்சியாளர்கள் இருவரின் மேற்பார்வையில், நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிய சிறுவனை, பயிற்சியாளர்கள் மீட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தான்.
இந்நிலையில் பயிற்சியாளர்கள் சுமன், செந்தில் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள பெரியமேடு போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.