நிதி மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோஸ்கி உள்ளிட்டோரின் நிறுவனங்கள் தொடர்புடைய மோசடி வழக்குகளில் 33 ஆயிரத்து 862 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், 33 ஆயிரத்து 862 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கப்பட்டதாகவும், அவற்றில் 15 ஆயிரத்து 113 கோடி மதிப்புடைய சொத்துகள், நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், பெரு நிறுவன நிதி மோசடி தொடர்பான வழக்குகளில் அந்நிறுவன இயக்குனர்கள் உள்ளிட்ட 374 பேர் கடந்த 5 ஆண்டுகளில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் பங்கஜ் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.