அரசு பங்களாவை காலி செய்யக் கூறி தாங்கள் அனுப்பிய கடிதத்துக்கு நன்றி என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி நடப்பேன் என்றும் மக்களவை வீட்டு வசதிக் குழுவுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தி, அவரது அரசு பங்களாவை ஒரு மாதத்துக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் கடிதம் அனுப்பி இருந்தது.
அதற்கு பதிலளித்து கடிதம் எழுதியுள்ள ராகுல்காந்தி, பொதுமக்களின் விருப்பத்தின்பேரில் கடந்த 4 முறை மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான், எனது மகிழ்ச்சியான தருணங்களை இதில் செலவிட்டேன் என்றும் எனது உரிமைகளுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாமல், தங்களது கடிதத்தில் அடங்கிய விவரங்களின்படி நிச்சயம் நடப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராகுல்காந்தி அரசு பங்களாவை காலி செய்தால், அவர் அவரது தாயுடன் வசிக்கலாம் அல்லது எனது பங்களாக்களில் ஒன்றை அவருக்குத் தருவேன் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.