சென்னை பெரும்பாக்கத்தில் 800 குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காமல், ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கும் தனியார் கட்டுமான நிறுவனத்தை கண்டித்து வீட்டு உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா புல்ஸ் எனும் கட்டுமான நிறுவனம் கட்டிய இந்த 19 அடுக்குமாடி கட்டிடத்தில், ஒரு வீடு 60 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.
இந்தியா புல்ஸ் நிறுவனம், ஓசோன் கிரீன் எனும் நிறுவனத்திடம் கட்டிடத்தை விற்பனை செய்துவிட்டு மொத்த பொறுப்பையும் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு முதல் வீடு வாங்கிய உரிமையாளர்களுக்கு கட்டுமான நிறைவு சான்று வழங்கவில்லை, மின் இணைப்பும் வழங்கப்படவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்கள், குப்பைக் கூட முறையாக அகற்றப்படுவதில்லை என வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஓசோன் நிறுவன திட்டத்தின் தலைவர் ஜெகனை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் பதிலளிக்கவில்லை.