அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
வரும் மார்ச் 26-ஆம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றும், நாளையும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவோர் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, மேலதாளம் முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, பின்னர் 25 ஆயிரம் ரூபாய் வேட்புமனு கட்டணம் செலுத்தி, தேர்தல் ஆணையர்களான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானத்தின் மூலம் திருத்தப்பட்ட கட்சி சட்டத்திட்ட விதிகளின்படி, எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவை, கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட 10 மாவட்டச் செயலாளர் முன்மொழிந்தனர். செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிந்தனர்.