சென்னையில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததால், ரத்த காயங்களுடன் சாலையில் சரிந்தார்.
குணசீலன் என்பவர், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ஆலந்தூர் வழியாக சென்றபோது, கழுத்து பகுதியில் நூல் உராய்வதுபோல் உணர்ந்துள்ளார்.
அதனை அகற்ற முயன்றபோது கை விரல்களை நூல் அறுத்து, கழுத்தை சுற்றி இறுக்கியுள்ளது. கையிலும், கழுத்திலும் ரத்தம் சொட்ட, இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி விழுந்த குணைசீலனை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
குணசீலனுக்கு கையில் மூன்று தையல் போடப்பட்டு, கழுத்தை சுற்றி கட்டு போடப்பட்டுள்ளது. மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் என காவல்துறை எச்சரித்துள்ள நிலையில், ஞாயிறு மதிய வேளைகளில், பரங்கிமலை மற்றும் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சிலர் மாஞ்சா நூல் பட்டம் விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.