புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பப்பட்டது தொடர்பாக இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், சட்ட ஆலோசனை மற்றும் புகார்கள் அடிப்படையில் இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், வழக்கு விசாரணையின் முடிவிலேயே வதந்தி பரப்பப்பட்டதற்கான காரணம் குறித்து தெரிய வரும் என்றும் குறிப்பிட்டார்.
தாக்குதல் தொடர்பாக சமூகவலைதளங்களில் பரவும் வீடியோ உண்மையானதில்லை என்றும், அந்த சம்பவம் எதுவும் தமிழ்நாட்டில் நடைபெற்றதில்லை என்றும் தெரிவித்த சைலேந்திர பாபு, தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் சிலர் மட்டுமே ஹோலி கொண்டாட்டத்துக்காக சொந்த மாநிலம் சென்றுள்ளதாகவும், மற்றவர்கள் தங்களது பணியை மீண்டும் தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டார்.