சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் ஒரு தரப்பு வழக்கறிஞர்கள் தர்ணாவில் ஈடுபட்டதோடு, சிலர் வாக்குப்பதிவிற்கான பொருட்களை சேதப்படுத்தியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்படாமல் தற்போது நடத்தப்பட்ட இத்தேர்தலில் க்யூஆர் கோடு மூலமாக ஸ்கேன் செய்த பிறகே வாக்காளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 4 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் க்யூஆர் கோடு முறையாக வேலை செய்யாததாலும், தேர்தல் பணியில் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தியதாலும் ஒருதரப்பு வழக்கறிஞர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பேலட் சீட்டை ஒரு தரப்பினர் வெளியே கொண்டு சென்றதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த அறைக்குள் ஒரு சிலர் உள்ளே புகுந்து தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டு இருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த கல்லூரி மாணவர்களையும் உடனடியாக வெளியே செல்லுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால், தேர்தல் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டதால், உடனடியாக தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கபீர் அறிவித்தார்.