இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் நோக்கில், சர்வதேச எல்லையை ஒட்டிய, ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், 2 மாதங்களுக்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச எல்லையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சம்பா மாவட்ட பகுதிகளில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது கடும் பனிமூட்டம் நிலவுவதால் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், வரும் நாட்களில் ஊடுருவல் முயற்சி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், அதை தடுக்கும் நோக்கில் இரவு ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.