புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 6 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த கன்னியப்பன், கோர்க்காடு ஏரிக்கரையில், தான் நடத்தி வந்த வாத்துப்பண்ணையில் பணிபுரிய, வறுமை நிலையிலுள்ள பெற்றோருக்கு பணம் கொடுத்து, சிறுமிகளை அழைத்து வந்து கொத்தடிமைகளாக வைத்திருந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு இதுகுறித்து புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவினர் விசாரித்தபோது, சிறுமிகளை பண்ணைத்தொழிலில் ஈடுபடுத்தியதுடன், அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது.
கன்னியப்பன் உள்ளிட்டோர் சிறுமிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கொடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார் உட்பட 6 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், கன்னியப்பனின் மனைவி சுபாவிற்கும் காத்தவராயன் என்பவருக்கும் ஆயுள் தண்டனையும், ஆறுமுகம் என்பவருக்கு 10 வருடம் சிறை தண்டனையும் விதித்தது.