சென்னையில் ஓ.எல்.எக்ஸ். தளத்தை பார்த்து, உயர் ரக பைக்கை வாங்க வந்ததாக கூறி, வீட்டிலிருந்து அதனை திருடிச்சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்ணாநகரை சேர்ந்த சுல்பி கராலி என்பவர், 2017ஆம் ஆண்டில் 14 லட்ச ரூபாய்க்கு வாங்கிய கவாசகியின் நிஞ்சா ஆயிரம் சிசி, உயர் ரக பைக்கை, 8 லட்ச ரூபாய்க்கு விற்பதாக, இரு நாட்களுக்கு முன் ஓ.எல்.எக்ஸ். தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்த ஒருவர், அதனை வாங்க விரும்புவதாகக்கூறி நேற்று சுல்பியின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
சுல்பி இல்லாதபோது, அந்நபர் வீட்டிற்கு சென்ற நிலையில், அந்த பைக்கை ஓட்டி பார்க்க வேண்டும் என சுல்பியிடம் தொலைபேசியில் கேட்டதாக சொல்லப்படுகிறது.
அதற்கு அவர் மறுத்த நிலையில், வீட்டின் முன் சாலையில் அதனை ஸ்டார்ட் செய்து மட்டும் பார்த்துக்கொள்ளலாம் என
கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, சுல்பி வீட்டின் பணியாட்கள் முன் பைக்கை ஸ்டார்ட் செய்துபார்ப்பது போல் நடித்த அந்நபர், திடீரென பைக்குடன் தப்பி சென்றார்.