நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். களத்தூர் கண்ணம்மா படம் மூலம் தமது 6வது வயதில் திரைத்துறையில் அறிமுகமான போதே குடியரசுத்தலைவரின் தங்கப்பதக்கத்தை அவர் வென்றார்.
16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், அரங்கேற்றம்,சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற பல படங்களில் இளைஞராகவும் நாயகனாகவும் வளர்ந்த அவர், தனக்கென தனி நடிப்புத்திறனையும் நடனத்திறமையையும் வளர்த்துக் கொண்டார்.
நாயகனில் 4 பேருக்கு நல்லது செய்ய எதையும் செய்யும் தாதாவாகவும், அபூர்வ சகோதரனின் அப்பு என்ற குள்ளனாகவும், புன்னகை மன்னனில் காதல் தோல்வியால் தனித்து வாழும் எண்ணற்ற ஆண்களின் பிரதிநிதியாகவும், அவ்வை சண்முகியில் ஆண் பெண் வேடத்திலும், குணாவில் மனநலம் தவறியவராகவும், அன்பே சிவம் படத்தில் நாடகக் கலைஞராகவும், தசாவதாரத்தில் பத்து வேடங்களிலும் நடித்து பல்வேறு பரிணாமங்களை வெளிபடுத்தினார் கமல்ஹாசன்.