செங்கல்பட்டில் ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி 5 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் 6 பேரை கைது செய்துள்ள தனிப்படை போலீசார், முக்கிய குற்றவாளிகள் 3 பேரை தேடி வருகின்றனர்.
கடந்த 7ஆம் தேதி திருப்போரூரை சேர்ந்த ஐடி ஊழியரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான மோகன்ராஜை சந்தித்த வெங்கடேசன், சுரேஷ் ஆகியோர், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் குறைந்த விலையில் நிலம் இருப்பதாக கூறி காரில் அழைத்து சென்றனர்.
அப்போது ஒரே காரில் வெங்கடேசன் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட 9 பேர் வந்ததால், யார் என கேட்டபோது நில புரோக்கர்கள் என்று கூறிய நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள நிலங்களைக் காட்டிய அந்த கும்பல் மோகன்ராஜை தையூருக்கு அழைத்துச் சென்று கத்தி காட்டி மிரட்டியுள்ளனர்.
மேலும், மோகன்ராஜின் மனைவியை தொடர்பு கொண்டு 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குளம் அருகே வரவைத்து பணத்தை பெற்றுகொண்டு தப்பி சென்றுள்ளனர்.
அதன் பின் கூடுவாஞ்சேரியில் இறக்கி விடப்பட்ட மோகன்ராஜை மீட்ட அவரது மனைவி, கேளம்பாக்கம் போலீசில் அளித்த புகாரின் பேரில், செல்போன் சிக்னல் மூலம் கடத்தல் கும்பலை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.