பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், தமிழகத்தில் 10 நிர்வாகிகள் உட்பட நாடு முழுவதும் 106 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ எனும் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
அமலாக்கத்துறையும் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டது. 2020ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கலவரத்தை தூண்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் அமைப்பு நிதி உதவி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாணவர் அமைப்பான கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை ,சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு அதன் மூலம் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்த முயன்றதாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை அப்போது நடத்திய சோதனையின் போது சிக்கிய ஆவணங்களின் படி, ஒரே நேரத்தில் பிஎஃப்.ஐ, எஸ்.டி.பி.ஐ அமைப்பு நிர்வாகிகள் வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இது வரை இந்த சோதனையில் 106 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 10 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 22 பேரும், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் தலா 20 பேரும், அசாம், உத்திர பிரதேசம், ஆந்திரா, மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பாண்டிச்சேரியிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிஎஃப்.ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் என்.ஐ.ஏ சோதனை நடத்துவது தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.