மின்சார கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இதற்கு 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள இந்நாள் கருப்பு நாள் என்று விமர்சித்தார்.
நீட் தேர்வை இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் எதிர்க்காத நிலையில், தமிழகத்தை ஆளும் திமுக அரசு மட்டுமே எதிர்ப்பதாகவும், அரசியல் செய்வதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தர்மராஜ் என்ற டீக்கடை தொழிலாளியின் மகளும் அரசு பள்ளி மாணவியுமான அகிலாண்டேஸ்வரி, நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். அவரை நேரில் பாராட்டிய அண்ணாமலை, அகிலாண்டேஸ்வரியின் எதிர்கால கல்வி செலவு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் பாஜக ஏற்குமென தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் தேர்ச்சியடையும் மாணாக்கர்களை பாராட்ட திமுகவுக்கு மனமில்லை என்றும், அதற்கு மாறாக மாணவர்கள் தற்கொலையை தூண்டும் வகையில் பள்ளிக்கல்வி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பேசி வருகின்றனர் என்றும் விமர்சித்தார்.