இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டிய ஒரு சிறப்புச் செய்தியை காண்போம்.
மாதா பிதா குரு தெய்வம் என்று நமது முன்னோர்கள் வரிசைப்படுத்தினார்கள். தெய்வத்தை விட பெற்றோரும் பெற்றோருக்கு அடுத்து கல்வியும் ஞானமும் போதிக்கும் ஆசிரியரும் முதல் மூன்று இடங்களில் வைத்து தெய்வத்தை நான்காம் இடத்தில் வைத்தனர்.
இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் பணி என்பது கல்வியை போதிப்பதோடு, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பண்புகளைப் போதிக்கும் புனிதமானதாகும்...
மாணவர் பருவம் கபடமறியாத வெகுளிப் பருவம். அவர்களுக்குப் படிப்பை மட்டும் அல்ல நல்ல ஒழுக்கத்தையும், அறத்தையும் ஆசிரியர்களே போதித்து வருகின்றனர். ஒரு கல்லை சிற்பி செதுக்கி சிறந்த சிலையாக உருவாக்குவது போல், மாணவர்களை பட்டை தீட்டி மெருகேற்றுவது ஆசிரியர்களே..
ஒவ்வொரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டின் வகுப்பறைகளில் உருவாக்கப்படுகிறது என்பதே உண்மை. வாங்குகிற ஊதியத்தை விடவும் தங்கள் மாணவச் செல்வங்களின் வாழ்வை சிறந்த பாதையில் வழி நடத்த உழைக்கும் ஆசிரியர்களுக்கு இந்த நாளில் நாம் நன்றிக் கடன் செலுத்துவோம்.