நாட்டில் உள்ள அனைவருக்கும் அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்தவும், நவீன உள்கட்டமைப்பை உருவாக்கவும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரு நாட்கள் அரசு முறை பயணமாக கேரளா மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். கொச்சியில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பாரம்பர்ய முறைப்படி பட்டு வேட்டி சட்டையில் பிரதமர் பங்கேற்றார்.
அதில் உரையாற்றிய அவர், கேரளாவில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக கூறினார். கேரளாவின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்கொள்பவர்களைக் காப்பாற்ற சிலர் குழுக்கள் இணைந்து செயல்படுவதாக சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்து வருவதாக கூறினார். இரட்டை என்ஜின் அரசுகளால் அம்மாநிலங்களின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளதாகவும், இதேபோன்ற அரசு கேரளாவில் அமைந்தால், வளர்ச்சியில் புதிய உச்சங்களை எட்டலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஸ்ரீ அய்யா வைகுண்ட சுவாமிகள், ஸ்ரீ நாராயண குரு, ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் போன்றோர் சமூகத்தில் உள்ள தீமைகளை அகற்ற அரும்பணியாற்றியாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பின்னர், காலடியில் ஆதிசங்கரர் அவதரித்த ஆதி சங்கர ஜென்ம பூமிக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
கொச்சி மெட்ரோவின் இரண்டாம் கட்ட பணிக்கும், எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் நகர், கொல்லம் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும், எஸ்.என். ஜங்ஷன் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டப்பட்டது.
முன்னதாக, கொச்சியில் பிரதமர் மோடிக்கு கொட்டும் மழையில் பா.ஜ.க. தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வழிநெடுகிலும் வரவேற்பளித்தனர்.