சிதம்பரத்தில் பேத்தியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தவித்த மூதாட்டியை அலேக்கா தூக்கி ஆட்டோவில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
சிதம்பரம் நகரில் உள்ள கீழவீதியில் 75 வயது மூதாட்டி ஒருவர் நடைபாதையில் அமர்ந்திருந்தார். நடக்க முடியாமல் சிரமப்பட்ட அவரைப் பார்த்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் அவர் அருகில் சென்று விசாரித்தனர். அப்போது அவரது பெயர் கோமதி என்றும் பேத்தியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் குடும்ப உறுப்பினர்களின் விவரத்தை பெற்று செல்போன் மூலம் பேசி இரு தரப்பையும் சாமாதானம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், இரண்டு காவலர்களை அழைத்து, மூதாட்டியை அலேக்காக தூக்கி ஆட்டோவில் ஏற்றி உறவினர்களிடம் சேர்க்க ஏற்பாடு செய்தார்.
சிதம்பரம் அருகே வையூர் கிராமத்தில் உள்ள மூதாட்டி கோமதியின் உறவினரான கண்ணகி என்பவர் வீட்டிற்கு அழைத்து சென்ற போலீசார், கோமதியை அங்கு இறங்குமாறு கூறினர். ஆட்டோவை விட்டு இறங்க மறுத்து குழந்தை போல அடம் பிடித்த ((பாட்டியின் கைவிரல்களை விடுவித்து)) மூதாட்டியை ஆட்டோவில் இருந்து இறக்கி அழைத்துச்சென்றனர்
அந்த வீட்டு வாசலில் அமர்ந்திருந்த உறவுக்காரப் பெண்ணோ, அதை அப்படியே வாசலில் போட்டுவிட்டு செல்லும் படி கூறினார்
வயது மூப்படைந்தால் பெரியவர்கள், கோபத்திலும், குணத்திலும் குழந்தைகளாகி விடுவது இயல்பு, அவர்களுக்கு போட்டியாக சண்டையிடாமல் கவனித்துக் கொள்வது ஒவ்வொரு வாரிசுகளின் பொறுப்பு மிக்க கடமை என்பதை உணர வேண்டியது அவசியம்.