நாட்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்கும் நடவடிக்கைகளில் மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றும் சிறுதானிய வகைகளை விவசாயிகள் அதிகளவில் பயிரிட வேண்டும் என்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார்.
அந்த வகையில் இன்று உரையாற்றிய அவர், சுதந்திர தினத்தின்போது, வீடுதோறும் மூவர்ண கொடிகளை ஏற்றியதற்கு பிரதமர் மோடி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராக நாட்டில் பல படைப்பாற்றலுடன், பன்முகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாடு, மக்கள் பங்களிப்பு ஆகியன ஊட்டச்சத்து இயக்கத்திற்கு வலுசேர்த்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும், அங்கன்வாடி சேவைகள் சென்று சேர்வதை கண்காணிப்பதற்காக 'போஷன் டிராக்கர்' என்ற ஊட்டச்சத்து கண்காணிப்பு செயலியும் உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஊட்டச்சத்து பற்றாக்குறையில் இருந்து நாடு விடுபட, அனைவருக்கும் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் பெரும் பங்காற்றி வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்கும் முயற்சிகளில் ஈடுபட நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
சென்னையை சேர்ந்த ஸ்ரீதேவி வரதராஜன் என்பவர், மத்திய அரசின் MyGov இணையதளத்தில், தேசத்தின் சிறுதானிய வரைபடம் ஒன்றை தனக்கு அனுப்பியதாகவும், மனதின் குரலின் நிகழ்ச்சியில் சிறுதானியத்தின் பயன்கள் பற்றிப் பேசுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் பிரதமர் மோடி சுட்டிகாட்டினார்.
கடந்த சில காலமாகவே நாட்டிற்கு எந்த ஒரு அயல்நாட்டு விருந்தினர் வந்தாலும், சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் அவர்களுக்கு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறுதானிய வகைகளை விவசாயிகள் அதிகளவில் பயிரிட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.