இந்திய ரயில்வேயின், டிக்கெட் வழங்கும் பிரிவான ஐஆர்சிடிசியின் டிஜிட்டல் தரவுகளை பணமாக்குவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு அளிக்கப்படும் என வெளியான தகவலுக்கு ரயில்வேத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
ரயில்வே துறையின் டிஜிட்டல் தரவுகளை விற்று ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது.
இதுகுறித்து விளக்கமளித்த இரயில்வே துறை, ஏற்கனவே உள்ள சட்டங்களுக்கு உட்பட்டு பொதுவான தரவுகளை ஆய்வு செய்து பணமாக்கல் திட்டத்துக்கு உதவும் வகையில் தற்போதைய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், தகவல் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றிய பின்னரே, தரவுகளை விற்று பணமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், பயணிகளின் தனிப்பட்ட தரவுகள் விற்பனை செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.