சென்னையில் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடும் நபர்களை மட்டுமே குறிவைத்து தாக்கி பணப்பறிப்பில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாதம் 27ஆம் தேதி அண்ணாசாலையில் இருசக்கரவாகனத்தில் சென்ற சிவபாலன் என்பவரை மறித்து 20 லட்சத்தை 6 பேர் பறித்து சென்றனர். சிவபாலன் பணத்தை முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.
சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்த 6 பேர் பதிவு எண் இல்லாத 4 இருசக்கர வாகனத்தில் 70 முதல் 80 கிமீ வேகத்தில் பாரிமுனை பகுதியிலிருந்து தனிதனியாக பின் தொடர்ந்து வந்து பணம் பறித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
செல்போன் டவர் லொக்கேஷனை வைத்து செல்போனின் ஐபி. முகவரியை வைத்து, சினிமா துறையில் ஏஜெண்டாக பணியாற்றி வந்த சுரேஷ் உள்பட மொத்தம் 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த கும்பல் விர்ச்சுவல் எண் கொண்ட செயலியை பதிவிறக்கம் செய்து, வெளி நாட்டு எண்களாக மாற்றி அந்த எண்ணை வைத்து வாட்ஸ் அப் குழு அமைத்து தகவல் பரிமாறி கொண்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலின் தலைவனை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.