இந்தியாவில் செயல்படும் சீனாவின் விவோ மொபைல் நிறுவனம் வரி விதிப்பைத் தவிர்க்க விற்பனைத் தொகையில் ஐம்பது விழுக்காட்டை அதாவது 62 ஆயிரத்து 476 கோடி ரூபாய் அளவுக்குச் சீனாவுக்கு அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
பண மோசடி மற்றும் வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டில் டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் விவோ நிறுவனம், அதன் 23 துணை நிறுவனங்கள், இயக்குநர்களின் வீடுகள் என நாற்பதுக்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் 119 வங்கிக் கணக்குகளில் உள்ள 465 கோடி ரூபாயை முடக்கியதுடன், 73 இலட்ச ரூபாய், 2 கிலோ தங்கக் கட்டிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
விவோ இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் சீன நாட்டவர் சிலர் சோதனைக்கு ஒத்துழைக்காமல் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அதிகாரிகள் கைப்பற்றிய டிஜிட்டல் கருவிகளை எடுத்து மறைக்க முயன்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பின் லூ 2018ஆம் ஆண்டே இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவரால் பதிவுசெய்யப்பட்ட பல நிறுவனங்கள் தற்போது ஆய்வில் உள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.