அந்தமான் தீவுக் கூட்டத்தின் ஒருபகுதியான கிரேட் நிக்கோபார்த் தீவில் சரக்குப் பரிமாற்றத் துறைமுகம் அமைத்து உட்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தினால் சிங்கப்பூர், துபாய், ஹாங்காங் நகரங்களைப் போல் நிக்கோபார்த் தீவு பெரும் வணிக மையமாக உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதிஆயோக் தயாரித்துள்ள வளர்ச்சித் திட்டத்தில் 72 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டுச் சரக்குப் பெட்டக முனையம், விமான நிலையம், அனல்மின் நிலையம், ஆறரை இலட்சம் பேர் குடியிருக்கும் வீட்டு வசதிகொண்ட நகரியம் அமைப்பது ஆகியன அடங்கும். உலகின் கடல்வழிச் சரக்குப் போக்குவரத்தில் 40 விழுக்காடு நிக்கோபார்த் தீவின் அருகே உள்ள கடல்வழியாகத்தான் நடைபெறுகிறது.
சீனாவுக்கு எண்ணெய்க் கப்பல்களும், சீனாவில் இருந்து உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களும் இதன் அருகே உள்ள மலாக்கா நீரிணை வழியேதான் செல்கின்றன. நிக்கோபார்த் தீவில் ராணுவக் கட்டமைப்புகளை வலுப்படுத்தினால், இந்தியாவின் வடக்கெல்லையில் அத்துமீறும் சீனாவுக்கு ஓர் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.