சவுதி அரேபிய அரசின் எரிபொருள் உற்பத்தி நிறுவனமான அராம்கோ, ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது.
கொரோனா ஊரடங்கின் போது வீடுகளில் முடங்கிய மக்கள் தொழில்நுட்ப சாதனங்களை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் பதினாறே மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலரில் இருந்து 3 டிரில்லியன் டாலராக உயர்ந்தது.
கொரோனா ஊரடங்கில் இருந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியதும், ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் குறைந்ததால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர்.
இதனால் அதன் பங்குச்சந்தை மதிப்பு 2.37 டிரில்லியன் டாலராக சரிந்தது. அதே சமயம், ஊரடங்கு தளர்வுகள் மற்றும் உக்ரைன் ரஷ்யா போரைத் தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரித்ததால், அராம்கோ நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 2.42 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.