நகைக்கடையில் ஏழு பவுன் தங்கநகையை 95 விழுக்காடு தள்ளுபடி விலையில் மிரட்டிப் பெற்றதாக வந்த குற்றச்சாட்டில் கேரள டிஜிபி மீது விசாரணை நடத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் சிறைத்துறை டிஜிபியாக இருக்கும் சுதேஷ் குமார் திருவனந்தபுரத்தில் ஒரு நகைக்கடையில் 7 பவுன் தங்கச் சங்கிலியை 95 விழுக்காடு தள்ளுபடி விலையில் தர வேண்டும் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.
நகைக்கடை ஊழியர்கள் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்க முன்வந்தும் அவர்களை டிஜிபி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாளும் இதேபோல் கடைக்குச் சென்று மிரட்டியபோது உரிமையாளர் தலையிட்டு 95 விழுக்காடு தள்ளுபடி விலையில் நகையை வழங்கியதுடன் அதை பில்லிலும் பதிவு செய்துகொண்டார்.
இது குறித்து உரிய சான்றுகளுடன் கேரள முதலமைச்சரின் அலுவலகத்துக்கு நகைக்கடை உரிமையாளர் புகார் அளித்தார். இதனை பரிசீலித்த உள்துறை, விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும், வெளிநாடு சென்றுள்ள கேரள முதலமைச்சர் திரும்பியதும் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.