மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் அடுத்தடுத்து 3 முறை ஏவுகணைகள் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால், துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன.
இது குறித்து பேசிய லிவிவ் நகர மேயர் ஆண்ட்ரி சடோவி, இந்த தாக்குதலில் 3 துணை மின் நிலையங்கள், கிடங்குகள் உட்பட 60 கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், தாக்குதலில் 2 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். துணை மின்நிலையங்கள் சேதமடைந்ததால் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
காஸ்பியன் கடலில் இருந்து மொத்தமாக ஆறு ஏவுகணைகள் லிவிவ் நகரை தாக்கியதாக உக்ரைன் இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு ஏவுகணைகளை தாங்கள் சுட்டு வீழ்த்தியாகவும், மூன்று ஏவுகணைகள் துணை மின் நிலையங்களை தாக்கியதாகவும், மற்றொன்று ஜகார்பட்டியா மாகாணத்தை தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை நடத்தி வந்த ரஷ்யா, மேற்கு உக்ரைன் பகுதியில் பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது இது முதல்முறை என்று கூறப்படுகிறது.