கேரளாவில் அரசு பேருந்து பின்பக்கமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தறிகெட்டு ஓடி, சாலையோரம் நடந்துச் சென்ற பெண் மீது மோதி இழுத்துச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
பாலக்காடு நோக்கிச் சென்ற அரசு பேருந்து வேரிக்காடு பகுதியில் அதிவேகமாக வளைவில் திரும்பிய போது, முன்னே சென்ற சரக்கு வாகனத்தின் பின்பக்கமாக மோதியுள்ளது. சரக்கு வாகனமும் வேகமாக சென்ற நிலையில், பேருந்து மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தறிகெட்டு ஓடி, சாலையோரம் நடந்துச் சென்ற பெண் மீது மோதி இழுத்துச் சென்றவாறு சாலையோர கடைக்குள் புகுந்தது.
இதில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சரக்கு வாகன ஓட்டுநர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். கடையின் முன்பகுதியில் இருந்த மரத்தின் மீது மோதி சரக்கு வாகனம் நின்றதால், கடைக்குள் இருந்த கடைக்காரர் உயிர் தப்பினார்.