ராஸ்னெஃப்ட் ரஷ்ய எண்ணெய் நிறுவனத்தின் கைவிடப்பட்ட பங்குகளை வாங்கும் சாத்தியங்களை ஆராயும்படி இந்திய எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலகின் 3-வது பெரிய நாடாக உள்ள இந்தியா, நாள் ஒன்றுக்கு தேவைப்படும் 50 லட்சம் எண்ணெய் பேரல்களில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது.
உக்ரைன் மீதான போர் காரணமாக ராஸ்னெஃப்ட் எண்ணெய் நிறுவனத்தில் வைத்துள்ள 19.75 சதவீத பங்குகளை கைவிடுவதாக லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அந்த பங்குகளை வாங்கும் சாத்தியங்களை ஆய்வுசெய்யும்படி ஓ.என்.ஜி.சி, இந்தியன் ஆயில் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், கெயில் உள்ளிட்ட நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல கிழக்கு ரஷ்யாவில் Sakhalin என்ற திட்டம் மூலம் இயற்கை எரிபொருள் எடுக்கும் அமெரிக்காவின் எக்ஸான் மொபில் நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளை வாங்கவும் பரிசீலிக்க ஓ.என்.ஜி.சி-யை மத்திய அரசு கேட்டுள்ளது.
பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தை போல எக்ஸான் மொபில் நிறுவனமும் தன் ரஷ்ய நிறுவனங்களில் உள்ள பங்குகளை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தை மூலம் குறைந்த விலையில் அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.