இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்க ஆயிரம் ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுக் குத்தகைக்கு வழங்க மாநில அரசுகளிடம் வேதாந்தா நிறுவனம் கோருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 15ஆயிரம் கோடி ரூபாய் அளவில் இருந்த செமி கண்டக்டர் சிப்களின் சந்தை 2026ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 82ஆயிரம் கோடி ரூபாய் அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் தைவானின் பாக்ஸ்கானுடன் இணைந்து சிப் தயாரிக்கும் தொழில் தொடங்கப்போவதாக பிப்ரவரியில் அறிவித்தது. அதற்காகக் கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிர அரசுகளுடன் பேசி வருவதாகவும், ஆயிரம் ஏக்கர் நிலத்தை இலவசமாக 99 ஆண்டுக் குத்தகைக்குக் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தொழிற்சாலைக்குத் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றைக் குறைந்த விலையில் 20 ஆண்டுகளுக்கு மாற்றமின்றி வழங்கவும் கோரியதாகக் கூறப்படுகிறது. ஆலையின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.