சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் தடம்புரண்டு விபத்திற்குள்ளான ரயில் பெட்டிகளை 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் ரயில்வே ஊழியர்கள் மீட்டனர். சம்பவம் தொடர்பாக ரயில் ஓட்டுநர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடைக்கு வந்த மின்சார ரயில் பிரேக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி அங்கிருந்த கடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாது. பின்னால் வந்த பெட்டிகள் தடம் புரண்டன. முன்னதாக ரயில் ஓட்டுநர் பவித்ரன் வெளியே குதித்ததால் காயமின்றி உயிர் தப்பினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள், தொழில்நுட்ப குழுவினர் விபத்திற்குள்ளான ரயிலை 9 மணி நேரம் போராடி மீட்டு நடைமேடையில் நிறுத்தினர்.
கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான முதல் பெட்டி மற்றும் இரண்டாம் பெட்டியை தவிர்த்து இதர பெட்டிகளை அகற்றி பணிமனைக்கு அனுப்பி வைத்தனர். 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து விபத்துக் காலங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு இன்ஜின் மூலம் ரயில் பெட்டிகளை மீட்டனர்.
விபத்து குறித்து, ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்க்காராம் அளித்த புகாரில் ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது, ரயிலை வேகமாக இயக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.