சென்னையில் 14 வயதான பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சினிமா குரூப் டான்ஸர் உள்பட 3பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சூளைமேட்டைச் சேர்ந்த அச்சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சினிமாவில் குரூப் டான்ஸராக இருப்பதாகவும், சிறுமியை காதலிப்பதாகவும் ஆசை வார்த்தை கூறி வெளியே அழைத்துச் சென்ற ஜெயசூர்யா அரும்பாக்கம் அசோக் நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார்.
இதற்கிடையில் சிறுமியைக் காணவில்லையென அவரது தாயார் குழந்தை நலக் குழு மூலம் கொடுத்த புகாரின்படி அரும்பாக்கம் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த விடுதியில் இதுபோன்று சிறுமிகளை இளைஞர்கள் சிலர் அழைத்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு காணாமல் போன பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சட்டவிரோதமாக விடுதி அறையில் அடைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை மீட்டனர்.