இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அகமதாபாத்தில் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று பார்வையிட்டதுடன் கை இராட்டையில் நூல் நூற்றார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்துக்கு வெளியே சாலையின் இருபுறமும் குஜராத் பண்பாட்டை விளக்கும் வகையிலான இசை நடனம் உள்ளட்ட கலைநிகழ்ச்சியுடன் போரிஸ் ஜான்சனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அகமதாபாத்தில் மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்ற போரிஸ் ஜான்சன், காந்தி வாழ்ந்த இடம், அவர் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
அப்போது குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலும் அவருடனிருந்தார். காந்தியின் பெண் சீடரான மீராபென்னின் தன்வரலாற்று நூல், காந்தி எழுதிய கைட் டூ லண்டன் ஆகிய நூல்களை ஆசிரம நிர்வாகிகள் போரிஸ் ஜான்சனுக்குப் பரிசளித்தனர்.
சபர்மதி ஆசிரமத்தில் போரிஸ் ஜான்சன் கை இராட்டையில் நூல் நூற்றுப் பழகினார். அவருக்கு ஆசிரம நிர்வாகிகள் உதவி புரிந்தனர்.
சபர்மதி ஆசிரமத்தின் பார்வையாளர் பதிவேட்டிலும் போரிஸ் ஜான்சன் குறிப்பெழுதிக் கையொப்பமிட்டார். அதில், எளிய மனிதரின் ஆசிரமத்துக்கு வந்தது பெரும்பேறாகும் என்றும், உலகைச் சிறப்பாக மாற்ற உண்மை அகிம்சை ஆகிய எளிய கொள்கைகளை அவர் எவ்வாறு அணிதிரட்டினார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அகமதாபாத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானியைச் சந்தித்துப் பேசினார். பிரிட்டனில் தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.
அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போரிஸ் ஜான்சன், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுடன் மற்றொரு தடையற்ற வணிக உடன்பாடு செய்துகொள்ள இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
உக்ரைனில் நிகழ்ந்த படுகொலைகளை பிரிட்டனும் இந்தியாவும் கண்டித்துள்ளதாகத் தெரிவித்தார். பிரிட்டன் - ரஷ்யா இடையான உறவை விட இந்தியா - ரஷ்யா இடையான உறவு வரலாற்று ரீதியாக மிகவும் வேறுபட்டது எனக் குறிப்பிட்டார்.
பாஞ்ச்மகால் மாவட்டம் ஹலோல் என்னுமிடத்தில் உள்ள ஜேசிபி நிறுவனத்தின் பொக்லைன் தொழிற்சாலையையும் போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். அப்போது ஒரு பொக்லைன் இயந்திரத்தில் ஏறி அமர்ந்து பார்த்தபின் கீழிறங்கினார்.
காந்திநகரில் குஜராத் உயிரித் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்டார். அவருடன் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலும் பங்கேற்றார்.
காந்திநகரில் அக்சர்தாம் சுவாமிநாராயண் கோவிலுக்கும் போரிஸ் ஜான்சன் சென்று பார்வையிட்டார். துறவியருடன் கைகோத்து நடந்து சென்ற அவர், கோவில் முன் குழுவாக நின்று படம்பிடித்துக் கொண்டார்.