டெல்லியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் வெடித்ததையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் சிலர் கற்களை வீசியதால் இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. உருவிய வாட்கள் கத்தி போன்ற ஆயுதங்களுடன் மோதல் பெரும் வன்முறையாக மாறியது.
இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. வாகனங்களை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கினர். கலவரத்தைத் தடுக்க முயற்சித்த போலீசார் சிலர் காயம் அடைந்தனர்.
அனுமன் ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தைத் தடுக்க டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுத்த நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை ஆளுநருடன் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவரும் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா டெல்லி காவல்துறை ஆணையரிடம் பாதுகாப்பு நிலவரங்களை கேட்டறிந்தார். கலவரத்தைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும் எச்சரிக்கையாக இருக்க காவல்துறையினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மீரட், நொய்டா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.