பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ஒரு வார கால அரசு முறை பயணமாக மொரீஷியஸ் நாட்டு பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இந்தியா வருகிறார்.
மொரீஷியஸ் பிரதமரை சந்திப்பதற்காக நாளை முதல் 3 நாட்களுக்கு குஜராத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அவருடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கிறார்.
இரு நாட்டு பிரதமர்களும் வரும் செவ்வாய்க்கிழமை குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய வைத்தியத்துக்கான மையத்திற்கு அடிக்கல் நாட்டுகின்றனர்.
அதைத் தொடர்ந்து, வரும் புதன்கிழமை காந்தி நகரில் நடைபெறும் உலகளாவிய ஆயுஷ் முதலீட்டாளர் மற்றும் ஆய்வாளர் உச்சிமாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்த அரசு முறை பயணத்தின் போது டெல்லி, குஜராத் தவிர உத்தர பிரதேசத்தின் வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கும் மொரீஷியஸ் பிரதமர் பயணிக்க உள்ளதாகவும் இந்த பயணம் இந்தியா - மொரீஷியஸ் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.