பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டது என்று தெரிவித்த தலைமை நீதிபதி, மாநில அரசுகள் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ரத்து செய்த துணை சபாநாயகர், மூன்று மாதங்களில் தேர்தலை நடத்த உத்தரவிட்டு நாடாளுமன்றத்தை கலைத்தார்.
இதனை அவசர வழக்காக எடுத்து முதற்கட்ட விசாரணையை நடத்திய தலைமை நீதிபதி உமர் அடா பண்டியல் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்புக்கு எதிரான செயலில் ஈடுபடக் கூடாது என அதிபர், சபாநாயகர் உள்ளிட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தனர்.
இன்று அடுத்தக்கட்ட விசாரணைகளை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது. இதனிடையே பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரையில் பிரதமர் பதவியில் இம்ரான்கான் நீடிப்பார் என அதிபர் அரிப் அல்வி அறிவித்துள்ளார்.